ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம் முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை:டிச.17-
‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, சென்னையில் முழுமையாகவும், இதர 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். பயனாளிகள் பட்டியல் அடிப்படையில், நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் கடந்த 14-ம் தேதி மாலை முதல் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் புயல், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரியின் அஷ்டலட்சுமி நகரில் பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கி, இப்பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரியகருப்பன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாருக்கெல்லாம் ரூ.6,000? – முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6,000 உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு 100 சதவீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பாதிப்புகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
வருமான வரி செலுத்துவோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வருமான வரி செலுத்துவோரும், பாதிப்பு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, சர்க்கரை அட்டை வைத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, சர்க்கரை அட்டையாக இருந்தாலும், வருமான வரி கட்டுபவராக இருந்தாலும் பாதிப்பு கூடுதலாக இருக்கும் விவரத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடைகளில் கொடுத்தால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, வருமான வரி செலுத்தக் கூடிய, உயர் வருவாய் பிரிவினர் நிவாரணம் கோரி விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
உயிரிழப்புகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கவும், கால்நடைகள் பாதிப்பு, படகுகள் சேதம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்றார்.இதனிடையே, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ. 7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.