ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு குவியும்

புதுடெல்லி: அக். 19: இந்திய அரசின் கோரிக்கையைஏற்று, 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் என ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அறிவித்துள்ளது. இதன்ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ‘உலக உணவு இந்தியா, 2023’ என்ற பெயரில் கண்காட்சி நடை பெற உள்ளது.
இதுகுறித்து மத்திய உணவுபதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறியதாவது. உலக உணவு இந்தியா கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இக்கண்காட்சியின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பார்.
இந்த கண்காட்சியில் 16 நாடுகள்,23 மாநில அரசுகள், 11 மத்திய அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் 950 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் நெதர்லாந்து பங்குதாரர் நாடாக பங்கேற்க உள்ளது.இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு செய்ய சில நாடுகள் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளன. அதுகுறித்த அறிவிப்பு கண்காட்சியின்போது வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கூடுதல் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் கூறும்போது, “பிரிட்டானியா, கிரீன்கிரஹி, புட்ஸ் அன்ட் இன்ஸ், செயின்ட் பீட்டர் அன்ட் பால் சீ புட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் ரூ.642கோடியை முதலீடு செய்ய தயாராகஇருப்பதாக உறுதி அளித்துள்ளன. இதுபோல சுவிட்சர்லாந்தின் புலர் குழுமம், அமெரிக்காவின் மாண்டலிஸ் மற்றும் கோக கோலா, ஐக்கிய அரபு அமீரகத்தின் லூலு குழுமம் ஆகிய நிறுவனங்களும் இத்துறையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தக் கண்காட்சியின்போது, ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.