ரூ.75,000 கோடியில் ‘சூரிய வீடு’ திட்டம்

புதுடெல்லி, பிப். 14- சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம்’ ரூ.75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள்) பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக ‘பிரதமரின் சூரியவீடு: இலவச மின்சாரம்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியிருப்பதாவது: நிலையான வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை ஊக்குவிப்பதற்காக, பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம் தொடங்கப்படுகிறது. ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.75,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு அதிக சலுகையுடன் வங்கி கடன் கிடைக்கும். நிலையான மானியம் மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தும் திட்டத்துக்காக மக்களுக்கு செலவு ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தில் தொடர்புடைய அனைவரும் தேசிய ஆன்லைன் இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் இத்திட்டத்தை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துகள் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டம் அதிக வருவாயை ஈட்டித் தரும், மின்சார செலவை குறைக்கும், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். சூரிய மின்சக்தியையும், நிலையான வளர்ச்சியையும் நாம் ஊக்குவிப்போம். இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.