ரேபரேலி தொகுதியில் ராகுல் சென்றமுடி திருத்தகம் பிரபலமாகிறது

ரேபரேலி மே 17-,உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ராகுல் ‘நியூ மும்பா தேவி சலூன்’ என்ற கடையை பார்த்தார்.
உடனே அந்த கடைக்கு ராகுல் சென்றார்.
அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹேர் ஸ்டைல் படங்களை பார்த்து, கடை உரிமையாளர் மிதுன் குமாரிடம் சில விவரங்களை கேட்டார். அதன்பின் தனக்கு முடி வெட்டி, தாடியை டிரிம் செய்யும்படி கூறினார். இது அவருக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. முடிவெட்டியபடியே அவரிடம் பல விஷயங்களை ராகுல் காந்தி பேசினார்.ரேபரேலி முடி திருத்தகத்துக்கு ராகுல் வந்து சென்ற வீடியோ வைரலாக பரவியது. அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. மேலும், ஊடகத்தினர் பலரும் மிதுன் குமாரிடம் பேட்டி எடுக்க வருகின்றனர். இது குறித்து மிதுன் குமார் கூறியதாவது: ராகுல் போன்ற பெரிய தலைவர் எனது கடைக்கு வருவர் என கற்பனை செய்துகூட பார்த்தது இல்லை.
பல விஷயங்களை பேசியபடியே நான் அவருக்கு முடிவெட்டினேன். அப்போது ராணுவத்தில் அக்னிவீரர்கள் தேர்வு குறித்து பேசினோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இத்திட்டம் அகற்றப்படும் என ராகுல் காந்தி கூறினார். அவர் தனக்கு ஓட்டு போடுமாறு கேட்கவில்லை. விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும்படி கூறினார். அவர் வந்து சென்றபின் எனது கடை பிரபலம் அடைந்து வருகிறது. ஊடகத்தினர் பலரும் வந்து பேட்டி எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு மிதுன் குமார் கூறினார்.