ரேவந்த் ரெட்டியை வீட்டிற்கே சென்று சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

டெல்லி, ஜூலை 2- தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வீட்டிற்கு நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.. இரு தலைவர்களுக்கும் இடையே நீண்ட கால நட்பு இருக்கிறது. இந்தச் சூழலில் இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, திடீரென காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டியை சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராகத் தேர்வானார். இதற்கிடையே அவர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்பது சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடிதம்: முன்னதாக இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது.. மறுசீரமைப்புச் சட்டத்தில் இருந்து எழும் பிரச்சினைகள் குறித்துப் பல விவாதங்கள் நடந்துள்ளன. இது நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாகத் தீர்க்க வேண்டியது அவசியம். எனவே, வரும் ஜூலை 6ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் உங்கள் இல்லத்தில் உங்களைச் சந்திக்கலாம் என இருக்கிறேன். நாம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபடும் வாய்ப்பை நமக்கு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்குப் பரஸ்பர நன்மைக்கு இரு தரப்பு ஒத்துழைப்பு தேவை” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஏன் முக்கியம்: ஆந்திராவில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டில் தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.. இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் கூட்டுத் தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த 10 ஆண்டுகள் இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர தலைநகராக அமராவதியை உருவாக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருந்தார். இருப்பினும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி அமராவதி தொடர்பான கட்டுமானம் எதுவுமே நடக்கவில்லை. இதனால் ஆந்திர தலைநகர் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.