லஞ்சம் பெற்ற புகார் எதிரொலிஎம்.பி.க்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

கொல்கத்தா: நவ.24- மஹுவா மொய்த்ரா விவகாரத்தை தொடர்ந்து எம்பிக்கள் கேள்வி எழுப்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவாமொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.மேலும் மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில்வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த பரிந்துரை குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்படும்.
இந்த சூழலில், மொய்த்ரா விவகாரத்தைத் தொடர்ந்து மக்களவை செயலாளர் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற இணைய கணக்கு விவரம், கடவுச் சொல்லை எம்பிக்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வாய்மொழியாக பதில் கோரப்படும் கேள்விகள் சம்பந்தப்பட்ட எம்பியின் கணக்கில் கேள்வி நேர நாளில் காலை 9 மணிக்கு பதிவேற்றம் செய்யப்படும்வாய்மொழி, எழுத்துப்பூர்வமாக பதில் கோரப்படும் கேள்விகள் ரகசியமானவை. இந்தகேள்விகளின் ரகசியத்தை பாதுகாக்க வேண்டியது எம்பிக்களின் கடமை என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களவையில் இருந்து மஹுவா மொய்த்ராவை வெளியேற்ற சதித் திட்டம் தீட்டப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது ஏற்கெனவே அவர்கள் திட்டமிட்டு வைத்திருந்த ஒன்றுதான்.
ஆனால் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வரும் மக்களவைத் தேர்தலில் மஹுவா மொய்த்ராவுக்கு சாதகமாக அமையும். மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அடுத்த சில மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்கும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எந்தக் கருத்தும்சொல்லாமல் அமைதி காத்தனர்.
முதல் முறையாக முதல்வர் மம்தா மவுனத்தை கலைத்து மொய்த்ராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்