லஞ்சம் வழக்கில் கைதான அங்கித் திவாரிக்கு ஜாமின்

புதுடெல்லி, மார்ச் 21- திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கோடு, அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ‘ அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அமித் ஆனந்த் திவாரி மற்றும் குமணன்,”அங்கித் திவாரியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்தக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவில் அவர்கள் தரப்பில் இதுவரை விளக்க மனு தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,’இந்த விவகாரத்தில் நேரடியான வாதங்களை முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேட்பதால் விளக்க மனு தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,’ இந்த விவகாரத்தில் அங்கீத் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறோம். அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதோடு தமிழ்நாட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.