லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை டிசம்பர் 20- அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கலை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதற்காக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் கைதான அவா் ஜாமீன் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்தித் திவாரி மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடுகையில், “அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும்.அங்கித் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில், தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்று கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.