லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வலம் வந்த பெங்களூர் கரகம்

பெங்களூர் : ஏப்ரல் . 24 – கன்னட சைத்ர மாதத்தின் முழு பௌர்ணமி நாளன்று அருள்மிகு நிலவொளியில் மல்லிகையின் அலங்காரத்துடன் கோவிந்தா கோவிந்தா என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கோஷம் எழுப்ப நேற்று நள்ளிரவு பெங்களூர் கரகம் மிகவும் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் ப்ரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடந்தது . லட்சக்கணக்கான பக்தர்கள் 800 ஆண்டுகள் சரித்திரம் உள்ள இந்த மல்லிகை கரகத்தை கண்டு பக்தி பரவசத்துடன் கண் ஒத்தி கொண்டனர். கோயிலில் பரிவாரங்களுடன் தர்மராய ஸ்வாமிக்கு பூஜைகள் செலுத்தி பின்னர் கும்பத்தில் திரௌபதி தேவியை வரவேற்று பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அப்போது மஞ்சள் புடவை மற்றும் வளையல்கள் அணிந்திருந்த கோயில் தலைமை அர்ச்சகர் ஞானேந்திரா சிறப்பு பூஜை செய்தார். பின்னர் மலர் கரகத்தை சுமந்து கோயில் ப்ராகாரத்தை மூன்று முறை வலம் வந்து அருகில் உள்ள ஷக்தி கணபதி மற்றும் முத்யாலாமா கோயிலில் பூஜைகள் செய்தனர்.

நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை சுமந்து அர்ச்சகர் ஞானேந்திரா கோயிலிலிருந்து வெளியே வந்த உடனேயே எங்கெங்கும் நிரம்பி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷங்களை தொடந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். தவிர கரகத்தின் முன்னே நூற்றுக்கணக்கான வீர குமாரர்கள் மற்றும் ஆயிர கணக்கான பக்தர்கள் புடை சூழ கரக ஊர்வலம் துவங்கியது. வீரகுமாரர்கள் தங்கள் கைகளில் கத்தியை பிடித்த படி கரகத்துக்கு பாதுகாப்பாய் கரகத்துடனேயே வந்தனர். இன்று அதிகாலை வரை கரகம் நகரின் அல்சூர் கேட் , காணிகரபேட்டே , நகரத்தப்பட்டே , கப்பன் பேட்டே , உப்பார்பேட்டே , அக்கிபேட்டே , அர்ளிபேட்டே , பலேபேட்டே , கும்பாரப்பேட்டே, கொல்லறப்பேட்டே, மாமூல் பேட்டே , திகளர பேட்டே , சுன்னிகள் பேட்டே , அவென்யூ வீதி , பி வி கே அய்யங்கார் வீதி , உட்பட சுற்றுப்பகுதிகளில் வாயிலாக சென்றது. கரக ஊர்வல பாதை முழுக்க பக்தர்கள் பானகம் மோர் விநியோகித்தார். கரகம் இன்று காலை பத்து மணியளவில் கோயிலை வந்து சேர்ந்தது.