“லண்டன் ப்ளான் பலிக்கவில்லை” – சிறையில் இருக்கும் இம்ரான் கானின் ஏஐ பேச்சு

இஸ்லாமாபாத்: பிப். 10 பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில் சிறையில் இருக்கும் இம்ரான் கான் உரையை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கி வெளியிட்டுள்ளது பிடிஐ கட்சி. அதில், “லண்டன் ப்ளான் பலனிக்கவில்லை; மக்களுக்கு நன்றி” என்று நவாஸ் ஷெரீபை மறைமுகமாகச் சாடியுள்ளார். தனது கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 266 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில்,சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி போட்டியிடதடை விதிக்கப்பட்டது. அதனால்அவரது கட்சியினர் சுயேச்சையாக போட்டியிட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிட்டன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப் தனது கட்சி பாகிஸ்தான் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அந்த உரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிடிஐ கட்சி இம்ரான் கானின் ஏஐ உரையை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சமாம் கட்சி வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள இம்ரான் கானின் உரை பாகிஸ்தான் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. தேர்தல் தொடர்பான இம்ரான் கானின் கருத்தைப் பெற்று அதனை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் அவர் பேசுவது போலவே வடிவமைத்து அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் இம்ரான் கான் பேசியிருப்பதாவது: லண்டன் திட்டம் பலிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள் எவரும் நவாஸ் ஷெரீபை நம்பவில்லை. இப்போது மக்கள் அனைவரும் தங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்திருப்பார்கள். அதை உணர்ந்த கையோடு தங்கள் வாக்குகளை பாதுகாக்கவும் அவர்கள் முயல வேண்டும். மக்களாகிய நீங்கள் எனது நம்பிக்கையை மெய்ப்பித்து விட்டீர்கள். தேர்தலில் நீங்கள் திரளாக வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையில் பங்கேற்றுள்ளீர்கள். நவாஸ் ஷெரீபுக்கு புத்தியில்லை. அவருடைய கட்சி 30 இடங்களில் பின்தங்கியிருந்த போது அவர் வெற்றி உரை நிகழ்த்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தேர்தலில் பிடிஐ கட்சி அழகான வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு உதவிய மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.