லலித் மோடிக்கு தொடர்ந்து பிராணவாயு சிகிச்சை

புதுடெல்லி,ஜன.14- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவர் லலித் மோடி. அதன் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்பின் அவர் லண்டனில் வசிக்கிறார் என தகவல் வெளியானது. இந்த நிலையில், லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் 24 மணிநேரமும் பிராணவாயு சிகிச்சை எடுத்து கொள்கிறேன் என்றும் தனது சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்து உள்ளார். 2 வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் ஆழ்ந்த நிம்மோனியா பாதிப்பும் காணப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.
3 வாரங்களில் அவர் மெக்சிகோ நாட்டிலும், பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக 2 மருத்துவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார். அவர்கள் உதவியுடன், தனது மகனின் ஆதரவுடன் லண்டனுக்கு விமானம் வழியே கொண்டு செல்லப்பட்டு உள்ளார். லலித் மோடி கடந்த ஆண்டு ஜூலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 10 வருட வயது வித்தியாசம் உள்ள நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன்.
சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன்.
அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும் என்று பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.