பெங்களூரு, செப். 23: லவ் ஜிகாத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 வயதான மோசிஃப் அஷ்ரப் என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்த பெங்களூரு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.
பெண் ஒருவரை வேறு மதத்திற்கு மாற வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜம்மு காஷ்மீரில் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு ஊரகத்திலுள்ள ஹெப்பகோடி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் புதன்கிழமை இரவு 32 வயதான மோசிஃப் அஷ்ரப் பேயைக் கைது செய்து, ஜம்மு & காஷ்மீரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வியாழன் பிற்பகல் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.
செப்டம்பர் 6 ஆம் தேதி, 38 வயதான பெண் ஒருவர் “லவ் ஜிஹாத், கற்பழிப்பு மற்றும் இயற்கைக்கு மாறான செக்ஸ்” ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பெங்களுருவைச் சேர்ந்த பெண், திருமண ஆசையில் தன்னை வேறு மதத்திற்கு மாற்ற முயன்றதாகக் குற்றம் சாட்டினார். செப்டம்பர் 7ஆம் தேதி பெல்லந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அது ஹெப்பகோடி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
என்றாலும், பாதிக்கப்பட்டதாக அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது குடும்பத்துடன் தங்க விரும்பினால், அவர் மதம் மாற வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இருவரும் சில ஆண்டுகளாக உறவில் இருந்து, ஒரு வீட்டில் ஒன்றாக தங்கி இருந்தனர். பின்னர் வேறு சில காரணங்களுக்காக அவர்கள் 2021 இல் பிரிந்தனர். தற்போதைய நிலையில், கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட வழக்கு, கர்நாடக மத சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் ஐபிசி பிரிவுகள் 506 (குற்றவியல் மிரட்டல்), 34 (பொது நோக்கத்திற்காகப் பலர் செய்த செயல்கள்), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து வழங்குதல்) மற்றும் 417 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.