
ஸ்ரீநகர்: செப். 15–-
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாகிர் உசேன், முகமது ஆசம், முகமது முஷ்டாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ரஜோரி மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்குதல், அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், மேலும் பிற மறைமுக உதவிகளைச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகளின் நடமாட்டத்துக்கும், அவர்களின் பயண ஏற்பாடுகளுக்கும் இவர்கள் துணைபுரிந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் வழிகாட்டிகளாகச் செயல்பட்டு, பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்வதற்கு உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு நோக்கி பயங்கரவாதக் குழுக்கள் செல்லும் வழியில் இவர்களின் பங்கு இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்கள் மீதான தாக்குதல் உட்படப் பல முக்கியத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு இவர்கள் உதவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர்களில் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தாக்குதல் நடத்தும் நேரத்தில் பயன்படுத்துவதற்கும் பயங்கரவாதக் குழுவினர் தங்களிடம் ஒப்படைத்ததாக கைதானவர்கள் கூறியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய சதிச்செயல் தடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரின் தொடர்புகள், அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பொறுப்புகள், பயங்கரவாதிகளுடன் இருந்த தொடர்பு, தளவாட உதவிகள் மற்றும் ஐஇடி வெடிகுண்டு தொடர்பான தகவல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.













