லாட்டரியில் 20 பேர் இந்திய குழுவுக்கு ரூ.33 கோடி பரிசு

அபுதாபி:பிப். 12:
கேரளாவை சேர்ந்தவர் ராஜீவ் அரிக்கத் (40). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஜன் நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அவரும், அவரது நண்பர்களும் இணைந்து ‘அபுதாபி லாட்டரி டிக்கெட்’ வாங்கினார். இந்த டிக்கெட்டுக்கு அண்மையில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ராஜீவ் அரிக்கத் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஜன் நகரில் பணியாற்றி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்குகிறேன். முதல்முறையாக நானும் எனது நண்பர்களும் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது.
இந்த முறை நானும் எனது மனைவியும் சேர்ந்து டிக்கெட்டை தேர்வு செய்தோம். மொத்தம் 2 டிக்கெட்டுகளை வாங்கினோம்.
அதற்கு சலுகையாக லாட்டரி நிறுவனம், 4 டிக்கெட்டுகளை வழங்கியது. தற்போது சலுகையாக வழங்கப்பட்ட 4 டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.33 கோடி பரிசு விழுந்துள்ளது. எனது 5 வயது, 8 வயது குழந்தைகளின் பிறந்த நாட்களின் எண்களில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
எங்களது குழுவில் 20 பேர் உள்ளனர். அனைவருமே தொழிலாளர்கள். இந்த முறையும் 20 பேரும் சேர்ந்தே லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினோம்.
எனவே பரிசு தொகையை நான் உட்பட 20 பேரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வோம். எங்களது குழுவில் சிலருக்கு வேலை பறிபோய் விட்டது. அவர்களுக்கு இந்த பரிசு தொகை பெரிதும் உதவும்.
இப்போதைய நிலையில் வானத்தில் பட்டம் போல பறக்கிறேன். நான் தொடர்ந்து ஐக்கியஅரபு அமீரகத்தில் பணியாற்று வேன். தொடர்ச்சியாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். இவ்வாறு ராஜீவ் அரிக்கத் தெரிவித்துள்ளார்.