லாரியில் சென்ற விமான பாகம் பஸ்சில் மோதியது

திருவனந்தபுரம், நவ. 4- கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழைய விமானங்களை உடைத்து அதன் பாகங்களை ஏலத்தில் விடுவது வழக்கம். பழைய விமானங்களை உடைப்பதற்கு முன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் அதை படிப்பதற்காக பயன்படுத்துவார்கள். இப்படி, பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட ஏர் இந்தியாவின் ஏ320 ஏர் பஸ் உடைக்கப்பட்டது. இதன் பாகங்களை ஐதராபாத்தை சேர்ந்த ஜோகீந்தர் சிங் என்பவர் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். நேற்று முன்தினம் விமானத்தின் சிறகுகள், இன்ஜின், டயர்கள் உள்ளிட்ட பாகங்களை 4 ராட்சத லாரிகளில் ஐதராபாத்துக்கு எடுத்து சென்றார். இதில், ஒரு லாரியில் எடுத்து செல்லப்பட்ட விமானத்தின் இறக்கை, திருவனந்தபுரம் அருகே எதிரே வந்த கேரள அரசு பஸ் மீது மோதியது. இதில், டிரைவர் இருக்கை முதல் பஸ்சின் பாதி வரை பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் டிரைவர் உட்பட 5 பயணிகள் காயமடைந்தனர்.