லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: டிச.17-தென்னக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி, கர்நாடக மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை குறையும். இது ஒருபுறமிருக்க பெட்ரோல், டீசல் விலையில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணமும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது.
அப்படி இருந்தும் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. எனவே, உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தை ரத்து செய்வதோடு, 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் இயங்கும் 26 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சாலைவரியை குறைக்க உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் மத்திய, மாநிலஅரசு திட்டங்களின் கீழ் பல்வேறுகட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு முழுமையாக மணல் கிடைக்காததால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புறமாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் லோடு மணலும், தமிழகம் முழுவதும் நடைபெறும் பணிகளுக்கு 9 ஆயிரம் லோடு மணலும் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு 300 லோடு மணல் மட்டுமே தருகின்றனர். சில அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானத்துக்கு தரமற்ற எம்சாண்ட் பயன்படுத்துவதால் கட்டிடங்கள் இடிந்துவிழும் அபாயம் உள்ளது. அதேநேரம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆன்லைன் முறையில் மணல் முன்பதிவு செய்யப்படுவதில்லை. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணலை வழங்குகின்றனர்.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 90 மணல் குவாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும். மழை காலம் முடிந்தபிறகு அனைத்து மணல் குவாரிகளையும் திறக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.