லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததில்7 பேர் உயிருடன் எரிந்து சாவு

சிகார், ஏப். 15: ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி மீது கார் மோதியதில் தீப்பிடித்து, காரில் இருந்த 7 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர்.
கார் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரிந்தனர்.
உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் நீலம் கோயல் (55), அவரது மகன் அசுதோஷ் கோயல் (35), மஞ்சு பிண்டல் (58), அவரது மகன் ஹர்திக் பிண்டல் (37), அவரது மனைவி ஸ்வாதி பிண்டல் (32) மற்றும் அவர்களது இரண்டு மைனர் மகள்கள் என அடையாளம் காணப்பட்டது.
அவர் ராஜஸ்தான் மாநிலம் சலாசரில் உள்ள சலாசர் பாலாஜி கோவிலில் இருந்து திரும்பி சென்று கொண்டிருந்தார். சுரு நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநர் லாரியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது கார் மோதாமல் இருக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது.
மோதியதில் காரில் இருந்த எல்பிஜி கிட் தீப்பிடித்து எரிந்ததால் லாரியில் ஏற்றப்பட்ட பஞ்சில் தீ பரவியது. அங்கிருந்தவர்கள் கடுமையாக‌ முயற்சி செய்தும் தீயின் தாக்குதலால் பூட்டியிருந்த காரின் கதவை திறக்க முடியாமல் காரில் பயணம் செய்தவர்கள் உயிருடன் எரிந்தனர்.
விபத்தை நேரில் பார்த்த சாட்சியான ராம்நிவாஸ் சைனி, பயணிகள் உதவிக்காக அலறினர். ஆனால் தீ காரணமாக அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று புலம்பினார். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்க‌ப்பப்பட்டன. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் காரில் இருந்தவர்கள் இறந்தனர்.
காரின் உரிமையாளர் அசுதோஷ், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காரை விற்றுள்ளார். காரை விற்ற முகவரைத் தொடர்பு கொண்டதாகவும், அவர் மூலம் அந்தக் குடும்பத்தை அடையாளம் காண முடிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.