லால்பாக் மலர் கண்காட்சி ரூ.22.59 கோடி வருவாய்

பெங்களூரு, ஜன. 29- லால்பாக் கண்ணாடி மாளிகையில் தோட்டக்கலைத் துறை நடத்திய ‘விஸ்வகுரு’ பசவண்ணா மற்றும் வசன சாகித்தியத்தின் அடிப்படையில் நடந்த மலர் கண்காட்சியை மொத்தம் 5.61 லட்சம் பேர் பார்வையிட்டத்தில் ரூ.22.59 கோடி வசூலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 76,500 பேர் பார்வையிட்டத்தில் ரூ. 37.50 லட்சம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக லால்பாக் வந்து கொண்டிருந்தனர். லால்பாக்கின் நான்கு நுழைவாயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.போக்குவரத்தை கட்டுப்படுத்த லால்பாக் பிரதான வாயிலில் ஒரு வழி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், தெருவோர வியாபாரிகள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பயணிகள் திணறிக் கொண்டிருந்தனர். அனைத்து பிஎம்டிசி பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. சாந்திநகர் பேருந்து நிலையம் முதல் லால்பாக் கேட் வரை, பூங்காவின் வெஸ்ட்கேட்டின் நடைபாதையில் மினி சந்தைகள் நிறுவப்பட்டன.கண்ணாடி மாளிகையில் பசவண்ணா, வசன சாகித்திய மலர்களின் மாதிரிகளைப் பார்க்க வந்திருந்தவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாரும், தோட்டக்கலைத் துறையினரும் போராடினர்.ஜனவரி 18 முதல் 28ம் தேதி வரை லால்பாக் மலர் கண்காட்சியை மொத்தம் 5.61 லட்சம் பேர் பார்வையிட்டதாகவும், மொத்தம் ரூ.22.59 கோடி வசூலானதாகவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.