லுங்கியா? வேட்டியா?

புதுடெல்லி: ஏப். 26: ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக் தொடர்ந்து 5 முறையாக முதல்வராக உள்ளார்.ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சார வீடியோ பதிவில், முதல்வர் நவீன் பட்நாயக் தனது வீட்டில் லுங்கி, பனியனில் இருந்தவாறு பேசியிருந்தார்.பிஜேடி-யின் சங்கு சின்னத்தை காண்பித்தவாறு அவர் பேசியிருந்தார். இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் பிரச்சாரத்தில் பேசுகையில், “லுங்கி அணிந்து ஒரு ஜோடி சங்குகளுடன் இருக்கும் முதல்வர் நவீன் பாபுவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோ பதிவை அவரது குமாஸ்தா தான் எடுத்திருப்பார். நவீன் பாபுவை பைஜாமா- குர்தா உடையில் காட்டியிருக்கலாம். நவீன் பாபுவை நான் மதிக்கிறேன். என்றாலும் ஒரு மூத்த வயதுடையவரை இதுபோல் அந்த குமாஸ்தா காட்டலாமா?” என்றார்.இதைத் தொடர்ந்து ஒடிசாவில் லுங்கி – வேட்டி தொடர்பான விவாதம் தொடங்கியது. பிஜேடி செய்தித் தொடர்பாளர்கள் சஸ்மித் பத்ரா, பிரகாஷ் மொகபத்ரா ஆகியோர் சமூக வலைதளங்களில் , “இதுபோன்ற பதிவுகளால் நமது சம்பல்பூர் நெசவாளர்களின் தயாரிப்புகளான லுங்கி விற்பனை மேம்படும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.இதையடுத்து ஒடிசா பாஜகவினர், ‘வேட்டிதான் நமது கலாச்சார உடை, லுங்கி அல்ல’ எனப் பதிவிட்டு பிஜேடியை கிண்டல் செய்தனர். இதற்கேற்ற வகையில் மறுதினம், சம்பல்பூர் நெசவாளர் பகுதியான அத்தாமல்லீக் பகுதிக்கு வேட்டியும், குர்தாவும் அணிந்து சென்று அமைச்சர் பிரதான் பிரச்சாரம் செய்தார்.