லெபனான் எல்லைப் பகுதிகளில் சண்டை தீவிரம்

டெல் அவிவ், அக். 21- லெபனான் எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதிகளில் வசிக்கும் 20,000 பேரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 14-வது நாளாக நீடித்தது.
-பாலஸ்தீனத்தின் காசாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் கடற்படை பிரிவை சேர்ந்த மூத்த கமாண்டர் ஷாலாபி கொல்லப்பட்டார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா எல்லைப் பகுதியில் உள்ள கோலானிக்கு சென்று வீரர்களை ஊக்கப்படுத்தினார். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவா கேலான்ட், காசா எல்லைப் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும். 2-வது கட்டமாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தப்படும். போரில் வெற்றி பெற்ற பிறகு 3-வது கட்டமாக காசாவில் புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும்” என்றார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “காசாவில் தரைவழி தாக்குதலுக்கு தயாராக உள்ளோம். ராணுவ தலைமை அனுமதி கிடைத்தவுடன் காசாவுக்குள் நுழைவோம்” என்றன.