லெபனான், சிரியாவில் இருந்தும் ராக்கெட் வீச்சு இஸ்ரேல் மீது பல்முனை தாக்குதல்

அவிவ்:அக். 12- இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 5வது நாளாக உக்கிரமடைந்த நிலையில், அண்டை நாடான லெபானான் மற்றும் சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தினர். மத்திய கிழக்கு நாடுகளிலும் போர் பரவுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 7ம் தேதி அத்துமீறி நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் ஹமாஸ் படையினரை குறிவைத்து, காசா மீது இஸ்ரேல் வரலாறு காணாத போர் தொடுத்துள்ளது. 5வது நாளாக நேற்றும் போர் மிகக் கடுமையாக நடந்தது. விடிய விடிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல் போர் விமானங்கள், காலையிலும் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தன. இதனால், காசாவில் கிட்டத்தட்ட அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகி உள்ளன.
2,200 பேர் பலி: அங்குள்ள பாலஸ்தீன மக்கள் உயிர் பிழைக்க ஒளிவதற்கு கூட இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஐநா அமைப்பு பள்ளிக் கட்டிடங்களை பாதுகாப்பு தங்குமிடங்களாக மாற்றி உள்ளது. வீடுகளை இழந்த 2.5 லட்சம் மக்கள் அங்கு தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஐநா தங்குமிடங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இப்போரில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் பலியாகி உள்ளனர். காசாவில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட பலி எண்ணிக்கை 1,055 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.
மின் நிலையம் முடங்கியது: இதற்கிடையே, காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், மின்சாரம், குடிநீர், உணவு, எரிபொருள் ஆகியவற்றை காசாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. இதனால், காசாவில் உள்ள ஒரே ஒரு மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அந்த மின் நிலையமும் எரிபொருள் இன்றி நேற்றுடன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் தற்போது பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. முழுக்க முழுக்க ஜெனரேட்டர்களை மட்டுமே நம்பி மக்கள் உள்ளனர். அவற்றையும் இயக்க எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.
மருந்துகளும் இல்லை: மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் மட்டுமே ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுகூட அடுத்த ஓரிரு நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பதால் அதன்பிறகு ஜெனரேட்டர்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் மருந்துகளும், உபகரணங்களும் தீர்ந்துள்ளதால் சிகிச்சை அளிப்பதற்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு 3 பாலஸ்தீன மருத்துவர்களும், 3 பத்திரிகையாளர்களும் பலியாகி உள்ளனர். இதனால் காசாவில் எந்த ஒரு இடமும் பாதுகாப்பானதாக இல்லை என அங்குள்ள நிருபர்கள் கூறி வருகின்றனர்.
கூடார நாடாகும்: கடந்த 2007ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பினர் காசாவை ஆட்சி செய்யும் நிலையில் அதன் பிறகு 4 முறை போரை எதிர்கொண்டுள்ளது. அப்போது எல்லாம் இல்லாத வகையில் இம்முறை இஸ்ரேல் மிக ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகிறது. காசா நகரில் விரைவில் கட்டிடங்களே இருக்காது வெறும் கூடார நாடாகி விடும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் நேற்று கூறி உள்ளார்.