வக்ஃப் வாரிய தலைவர் கருத்து

உத்தராகண்ட் மே 16: மாநிலம் ஹரித்துவார் நகரின் பீரான் களியார் பகுதியில் உலகப் புகழ்பெற்ற சாபிர் சாஹிப் தர்கா உள்ளது. இங்கு உத்தராகண்ட் மாநில வக்ஃப் வாரியத் தலைவர் ஷதாப் ஷாம்ஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்காக போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர்.
இதையடுத்து ஷதாப் ஷாம்ஸ் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தடம் புரளாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஒரு வலிமையான அரசு அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைந்துள்ளது.
நலத்திட்டங்களின் பலன்களை இதுவரை பெறாத கடைசி மனிதனும் வீடும் கழிப்பறை வசதியும் பெறுகிறான். சாலைகள் அமைக்கப்படுகின்றன. நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது.
உலகம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பல்வேறு நாடுகளை குழப்பம் மற்றும் கலவரம் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற நேரத்தில் இந்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமை தேவைப்படுகிறது. அவர் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இத்தருணத்தில் நாட்டின் தலைமை பலவீனமான கைகளுக்கு சென்றால் நாடு பாதிக்கப்படும்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அரசியலமைப்பு சட்டத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. சில அரசியல்வாதிகளின் கடைதான் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டு மக்களைகுறிப்பாக முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தப் பொய்யை பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஷதாப் ஷாம்ஸ் கூறினார்.