வங்கதேசத்தை நெருங்கிய ‘ஹமூன்’புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: அக். 25: வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் உள்ள ஹாமூன் புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சிட்டகாங்கிற்கு கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹாமூன் புயல் நிலவரம்: மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு `ஹமூன்’ எனப் பெயரிடப்பட்டது.”வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் உள்ள ஹாமூன் புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சிட்டகாங்கிற்கு (வங்கதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 06 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்க உள்ளதால், மத்திய கிழக்கு வங்கக் கடல் இன்று மாலை வரை கொந்தளிப்புடன் இருக்கும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக வானிலை: இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2023 முதல் 28.10.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.29.10.2023 மற்றும் 30.10.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று வட கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும் என மீனவர்க்ளுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.