வடகிழக்கு மாநிலங்களிலும் பிஜேபி

புதுடெல்லி: மார்ச். 2 -திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) முன்னிலை வகிக்கிறது.
திரிபுரா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் இதே கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணிக்கு எதிரான சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருந்தன. தற்போதைய முன்னணி நிலவரமும் அதை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
நாகாலாந்து: மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டயின்றி வெற்றி பெற்றார். இதையடுத்து, 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த கூட்டணி காலை 10 மணி நிலவரப்படி 42 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. என்பிஎஃப் கட்சி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னலை வகிக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இந்த கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கணித்தன. தற்போதைய முன்னணி நிலவரமும் அதை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
மேகாலயா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில், கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்குகள் பதிவாகின. அவற்றை எண்ணும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இங்கு தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக கான்ராட் கே. சங்மா உள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டது. காலை 10 மணி நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி 21 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இங்கு பாஜக 7 தொகுதிகளிலும், திரிணாமூல் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.