
சென்னை: டிசம்பர் 2-
புதிய மொபைல் போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பழைய போன்களில் இந்த செயலி அப்டேட் மூலம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு மக்களை கண்காணிக்குமோ என்ற கேள்வியும், சந்தேகமும் கூட எழுந்துள்ளது.
போலி மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மொபைல் அடையாள எண் (IMEI) எண்களை தடுப்பதும் அதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மோசடிகளை தடுக்க உதவும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் தங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியாமல் தடுக்க, ஐஎம்இஐ எண்களை மாற்றுவதாகவும், திருடப்பட்ட போன்களை அறியாமல் வாங்கும் அப்பாவி மக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நீக்க முடியாத செயலி சஞ்சார் சாத்தி இந்த சஞ்சார் சாத்தி செயலி இனி நாம் வாங்கும் அனைத்து போன்களிலும் இருக்கும். அதை டெலிட் செய்ய முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் அதை நீக்க முடியாது. அதே சமயம் பழைய போன்களில் அப்டேட் மூலமாக உங்கள் போன்களில் இந்த செயலி கொண்டு வரப்படும். இது போன்ற செயலிகள் ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் அரசு மூலம் மக்களின் போன்களில் பதிவிறக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ‘செகண்ட் ஹேண்ட்’ தொலைபேசி சந்தையும், திருடப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட சாதனங்களை எளிதாக மறுவிற்பனை செய்வதும் இந்த செயலியை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதம் மற்றும் இணையக் குற்றவியல் விசாரணைகளில் தொலைபேசிகளைக் கண்டுபிடிப்பதற்கான நம்பகமான செயலி ஒன்றை உருவாக்குவதை அவசியமாக்கி உள்ளது
அரசு வட்டாரங்களின் தகவல்படி, போலியாக மாற்றப்பட்ட ஐஎம்இஐ எண்கள் கொண்ட தொலைபேசிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை. தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் திறன் கொண்டவை. ஐஎம்இஐ மோசடி மூலம் உங்கள் போனின் அடையாளத்தை மாற்ற முடியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் செய்ய முடியும். இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சஞ்சார் சாத்தி செயலி ஐஎம்இஐ எண்களைச் சரிபார்க்கவும், திருடப்பட்ட தொலைபேசிகளைத் தடுக்கவும், போன்களின் தவறான பயன்பாட்டைத் தவிர்க்கவும் உதவும் என்று அரசு வாதிடுகிறது.
தனிப்பட்ட தகவல்கள் இதனால் தனிப்பட்ட தரவுகள் எதுவும் ஆப் மூலம் அணுகப்படாது என்றும், சட்டவிரோத சாதனங்களின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதே இதன் ஒரே நோக்கம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைதான், மற்றபடி மக்களை உளவு பார்க்க அல்ல என்று அரசு கூறி உள்ளது.
ஆனால் அங்குதான் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த செயலி மூலம் ஜிபிஎஸ் கண்காணிக்கப்படலாம்,போனின் ஆவணங்கள் கண்காணிக்கப்படலாம், போனின் ரெக்கார்டஸ் தொடங்கி புகைப்படங்கள் வரை கண்காணிக்கப்படலாம். அப்படி கண்காணிக்கப்படும் பட்சத்தில், அரசு நம்முடைய செயல்களை, உரையாடல்களை தீவிரமாக கண்காணிக்க முடியும்.
















