வட கர்நாடக வளர்ச்சிக்கு ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கலபுரகி : செப்டம்பர். 17 – ஒருங்கிணைந்த கல்யாண கர்நாடகா வளர்ச்சிக்கு மூன்றாயிரம் கோடி ஒதுக்கிவைத்து நான்கு மாதங்களில் இதை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். செழிப்பான மாநிலமாக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு செயல்படுவதற்கு தீவிரமாயிருப்பதுடன் தற்போதைய நிதி ஆண்டில் 2100 பள்ளிக்கூட அறைகள் கல்யாண கர்நாடகா பகுதியில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார். கல்யாண கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களை மறந்து ஓன்றாக சேர வேண்டும். இந்த நிலையில் தேவையற்ற அரசியல் செய்வது வேண்டாம். கல்யாண கர்நாடகா வாயிலாக நவீன கர்நாடகம் மற்றும் நவீன இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும். நம் அனைவரின் கன்னட மொழி , கலாச்சாரம் , நிலம் , நீர் ஒன்றாக உள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார். நகரின் போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் கல்யாண கர்நாடகா பவழ விழா தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கொடி ஏற்றிவைத்து பின்னர் பேசுகையில் அரசியல் அக்கறை இருந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியமாகும் என்றார். இந்த பகுதியின் விமோசனத்திற்கு நாம் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. சர்தார் வல்லபாய் படேல் எடுத்த முடிவால் இந்த பகுதி ஒருங்கிணைந்த கர்நாடகாவுடன் சேர்ந்தது. வல்லபாய் படேலுடன் உள்ளூர் தலைவர்களான ராமானந்த தீர்த்தர் , சர்தார் சரணகௌடா இனாம்தார் , ராஜா வெங்கடப்பா , தத்தாத்ரேயா அவராதி , ஆகியோருடன் 371க்கு போராட்டம் நடத்திய வாய்நாத் பாட்டில் ஆகியோரையும் முதல்வர் நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில் கல்யாண கர்நாடக பகுதியின் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க கூடுதல் உற்சாகம் அளித்து வருகிறோம். மத்திய அரசு ஏற்கெனவே கலபுரகி , விஜயபுரா , மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களில் ஜவுளி பூங்கா நிறுவ முடிவு செய்துள்ளது. இதனால் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. எனவும் முதல்வர் தெரிவித்தார். இந்த பகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் சங்கங்கள் அமைக்க பட்டுள்ளது . தவிர ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு இளைய சக்தி சங்கங்கள் நிறுவ வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தின் உற்பத்திகளுக்கு சந்தைகள் உருவாக்கவும் திட்டம் தீட்டியுள்ளோம்.இதனால் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் . இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார் .