வணிக பயன்பாட்டுக்கானசிலிண்டர் விலை ரூ.157.50 குறைப்பு

சென்னை, செப். 1: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர். அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.157.50 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.
இதையடுத்து சென்னையில் ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படவுள்ளன. கடந்த ஜூலை மாதம் ரூ.93 மற்றும் ஆகஸ்ட் மாதம் ரூ.92.50 என்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது ரூபாய் 157.50 குறைந்து உள்ளது.
கடந்த பல மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டது. இதையடுத்து வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.