வனவிலங்குகளின் கலைப் பொருட்கள் ஒப்படைப்பு

பெங்களூரு, பிப்.9- பொதுமக்கள் வசம் உள்ள வன விலங்குகளின் உறுப்புகளால் செய்யப்பட்ட கலைப் படைப்புகளை திரும்ப ஒப்படைக்க கடந்த ஜன.5 முதல் 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை ஒப்படைக்க‌ 19 பேர் தாமாக முன்வந்து திருப்பி அளித்துள்ளனர்.
வனவிலங்குகளின் உடல்கள் மற்றும் உறுப்புகளில் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்களை மீட்கும் நடவடிக்கையை வனத்துறை தொடங்கியுள்ளது.சட்டவிரோத வனவிலங்குகளின் உடல்கள் மற்றும் உறுப்புகளால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்களை ஜனவரி 19 முதல் பிப்ரவரி 07 வரை 19 பேர் தாமாக முன்வந்து திருப்பி ஒப்படைத்துள்ள‌னர்.
இதில், 14 பொருட்களை பெங்களூரில் வசிப்பவர்களும், அதைத் தொடர்ந்து மைசூரு, தார்வாட் மற்றும் தட்சிண கன்னடா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர். பொருட்களின் பட்டியலில் யானை தந்தங்கள், புலி நகங்கள், மான் தோல்கள் மற்றும் கொம்புகள் ஆகியவை அடங்கும்.இந்தப்பணி மெதுவாக தொடங்கினாலும் மக்கள் படிப்படியாக ஒப்படைத்து வருகின்றனர். திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. மாநிலம் முழுவதும் உள்ள எந்த வனத்துறை அலுவலகத்திலும் மக்கள் பொருட்களை சமர்ப்பிக்கலாம் என முதன்மை தலைமை வன பாதுகாவலர் பிரிஜேஷ் குமார் தீட்சித் தெரிவித்தார். ஏப்ரல் 9 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு மாநில அரசு அவகாசம் அளித்துள்ளது. குறித்த காலத்தில் ஒப்படைப்பவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது. ஏப்ரல் 9ம் தேதிக்கு பிறகு வனவிலங்கு பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாநில அரசு கடந்த 2003 ஆம் ஆண்டு 180 நாட்களுக்குள் வனவிலங்கு கலைப்பொருட்களை ஒப்படைக்க அனுமதித்தது. 1973 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு (கர்நாடக விதிகள்) விதி 34(1)ன் கீழ் 1973 ஆம் ஆண்டு வனவிலங்கு உறுப்புகள் மற்றும் உடல் உறுப்புகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்களுக்கான உரிமைச் சான்றிதழ்களை தனிநபர்கள் பெறுவதற்கான முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.