வன்கொடுமை வழக்கில் 6 பேர் கைது

திருநெல்வேலி: நவ.2- திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன்(19). இருவரும் தொழிலாளிகள். கடந்த 30-ம் தேதி இரவு இருவரும் மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் இருவரையும் வழிமறித்து, கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும், அவர்களை மிரட்டி 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அக்கும்பலிடமிருந்து தப்பிய இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.