வரலாறு காணாத கோடை வெயில்

கோவை: மே. 2 – தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இயல்பான அளவை விட நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களான சேலத்தில் 108, ஈரோட்டில் 109, கோவையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் அதிகரித்துள்ளது. உதகையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 84 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறை தலைவர் சத்ய மூர்த்தி கூறும் போது, “நடப்பாண்டில் கால நிலை மாற்றத்தால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சராசரியாக 2019-ல் 96.26, 2020-ல் 94.64, 2021-ல் 94.82, 2022-ல் 94.1, 2023-ல் 93.02, 2024-ல் 96.08 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது” என்றார்.