வரலாறு காணாத பனிப்பொழிவு

சிம்லா: டிச 30-
இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலம் இமாச்சல பிரதேசம். இந்த மாநிலத்தில் டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி இங்குள்ள குப்ரி, மணாலி, நர்காண்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கீலாங், ஹன்சா பகுதிகளில் 2 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. சிம்லாவின் புறநகர் பகுதியில் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு பனி பெய்தது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி காங்கரா மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சாலைகளிலும் பனி உறைந்து இருந்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.