வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி

நவிமும்பை, டிச. 17- இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இரு அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நவி மும்பையில்உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 428 ரன்களும், இங்கிலாந்து அணி136 ரன்களும் எடுத்தன. 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியஅணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 42 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. ஹர்மன்பிரீத் கவுர் 44, பூஜா வஸ்த்ராகர் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி மேற்கொண்டு பேட் செய்யாமல் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 479 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி பேட் செய்த இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஹீதர் நைட் 21, சார்லி டீன் 20, டாமி பியூமாண்ட் 17, கேத் கிராஸ் 16 ரன்கள்சேர்த்தனர்.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 4, பூஜா வஸ்த்ராகர் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள்அடிப்படையில் மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இதற்கு முன்னர் 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.