வருமான வரி சோதனையில் ரூ.95 கோடி ரொக்கம் பறிமுதல்

பெங்களூரு, அக். 17- பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் அம்பிகாபதியின் வீட்டில்வருமான வரித்துறை அதிகாரிகள்கடந்த 12-ம் தேதி சோதனை நடத்தினர். அதில் 23 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.42கோடி ரொக்கப்பணம் சிக்கியது. காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு தெலங்கானா அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
அங்கு நடைபெற இருக்கும் தேர்தலில் செலவு செய்வதற்காக இந்த பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 14-ம் தேதி ராஜாஜி நகரை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் கிருஷ்ணப்பாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் 3 லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இதேபோல், அவரது நண்பரும் ஜிம் உரிமையாளருமான ரமேஷ்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் நேற்று சோதனைநடத்தினர். அப்போது கட்டிலுக்குஅடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.8 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. மேலும் ரூ. 8 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள், 30 கைக்கடிகாரங்கள் சிக்கின. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பெங்களூருவில் ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 55 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தமாக ரூ.95 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. ரூ. 8 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள்,30 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் சிக்கின. ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின. இவற்றை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர் களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றன‌ர். இது தொடர்பாக கர்நாடகாவில் பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் நேற்று போராட்டம் நடைபெற்ற‌து. பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் பேசுகையில், இதில்உண்மையை கண்டறிய சிபிஐவிசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.