வர மகாலட்சுமி பண்டிகை சிட்டி மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்

பெங்களூர் ஆகஸ்ட் 23
கன்னடிகர் மற்றும் தெலுங்கினவர்களுக்கு வரமஹாலக்ஷ்மி விரதம் என்பது மிகவும் முக்கிய பண்டிகையாகும் . இந்த பண்டிகைக்கான ஏற்பாடுகளை அவரவர் இல்லங்களில் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே துவங்கி விடுவார்கள். இந்த நிலையில் இந்தாண்டு வரமஹாலக்ஷ்மி விரதம் நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி நகரின் சிட்டி மார்க்கெட் முழு களை கட்டியுள்ளது . பண்டிகைக்கு தேவையான பல ரக பூக்கள் , பழங்கள் மற்றும் பூஜை சாமான்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாய் குவிந்துள்ளனர். இதே வேளையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலைகளோ கடந்த மூன்று நாட்களாகவே இரட்டை மடங்கிற்கு உயர்ந்துள்ளன. ஆனாலும் எப்படியும் பண்டிகையை கொண்டாடியே ஆக வேண்டிய அவசியத்தில் எவ்வித விலையேற்றம் குறித்தும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் முண்டியடித்து கொண்டு பொருள்களை வாங்கி வருவதால் சிட்டி மார்க்கெட் முழுக்க திருவிழா போல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மார்க்கெட்டின் எந்த திசை நோக்கினும் மக்கள் தலைகள் மற்றும் பல வண்ண பூக்களே காட்சியளிக்கின்றன. வெறும் சிட்டி மார்க்கெட் மட்டுமின்றி சுற்றுப்பகுதியின் அனைத்து வீதிகள் மற்றும் நடைபாதைகள் முழுக்க பூக்கள் மற்றும் பழக்கடைகள் நிரம்பி வியாபாரம் முழு வீச்சில் நடந்து வருகிறது . . இந்த நிலை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும். இந்த கூட்ட நெரிசலால் மார்க்கெட்டிலிருந்து கிளம்பும் பேரூந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மக்கள் நெரிசலில் சிக்கி திண்டாடும் நிலையில் போக்குவரத்து போலீசார் மிகவும் சிரமத்துடன் வாகன போக்குவரத்தை சமாளித்து வருகின்றனர்.