வறட்சி நிவாரணம் தாமதம் மோடியின் வெறுப்பு அரசியல் – சித்தராமையா

பெங்களூரு, ஜன. 6: வறட்சி நிவார‌ண தாமதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு அரசியலோ அல்லது மத்திய அரசின் நிதி நெருக்கடியோதான் காரணம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதம் குறித்து பொம்மையின் விமர்சனத்துக்கு சமூக வலைதளத்தில் பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, வறட்சி நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு மத்திய அரசின் நிதி நெருக்கடிதான் காரணம் என்று பாஜக எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான‌ பசவராஜ பொம்மை கூறியிருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வறட்சி நிவாரணத்துக்கு 18 ஆயிரத்து 177 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று 3 மாதங்களாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இதுவரை அதற்கான நிதி வழங்கப்படவில்லை. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு அரசியலோ அல்லது மத்திய அரசின் நிதி நெருக்கடியோ காரணமாக இருக்கலாம். வறட்சி நிவாரணம் மட்டுமல்ல பல்வேறு திட்டங்களுக்கான மானியத்தை மத்திய அரசு விடுவிக்க தவறி வருகிறது. அரசியல் இருப்புக்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பசவராஜ் பொம்மை மீது குற்றம் சாட்டினார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பயிர் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு தலா ரூ.22,000 முதல் தவணையாக ரூ.105 கோடி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் மத்திய பேரிடர் நிவாரண நிதி (NDRF) உதவியை எதிர்பார்த்து, மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு விவசாயிக்கு இரண்டு ஹெக்டேர் நிலத்திற்கு மட்டுமே நிவாரணம் வழங்குகிறது. 33 சதவீதத்துக்கு மேல் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மாநில அரசின் வழிகாட்டுதலின்படி ‘உள்ளீட்டு மானியம்’ வினியோகிக்கப்படும் என வருவாய்த் துறை உத்தரவில் தெரிவித்துள்ளது.
மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.28,500, பாசனப் பயிர்களுக்கு ரூ. 17,000, நீண்ட கால பயிர்களுக்கு ரூ.22,500 இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்திற்கும் முதல் தவணையாக ரு.2,000 வழங்கப்படும். தோட்டக்கலை பயிர்களுக்கு கட்டாய பதிவு உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள‌ன
மாவட்ட ஆட்சியர்களின் தனிப்பட்ட கணக்கில் பணம் இருந்தும், விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ.2,000 இழப்பீடு வழங்க ஆறு மாதங்கள் பிடித்துள்ளது. இப்போது ரூ.105 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா விவசாயிகளுக்கு கண் துடைப்பு செய்வதில் ஈடுபட்டுள்ளார் என்று பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
மேலும் “எங்கள் ஆட்சியில், வெள்ளத்தால், 13.09 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன. அந்த கால கட்டத்தில் நேரத்தில், 14.63 லட்சம் விவசாயிகளின் கணக்கில் 2 மாதங்களில் ரூ.2,031 கோடி நேரடியாக பணம் செலுத்த‌ப்பட்டது. நாங்கள் மத்திய அரசின் மானியத்திற்காக காத்திருக்கவில்லை. மானாவாரி பயிர் சேதத்திற்கு ரூ.6,800 நிர்ணயிக்கப்பட்ட போதும், எங்கள் அரசு ரூ.13,600 இழப்பீடு வழங்கியது. அதே போல ரூ. 13,500 பாசன நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட போதும், ரூ. 25,000 எங்கள் அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கப்பட்டது. தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 18,000 நிர்ணயித்தப்போதும், எங்கள் அரசு ரூ.28,000 இழப்பீடு வழங்கியது என்று தெரிவித்திருந்தார்.