வளர்ச்சிக்கு மும்முனை சூத்திரம்

புதுடெல்லி. ஆக.15-. இந்தியா புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னேறி வருகிறது. மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய “மும்மைகள்” நாட்டின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றும் திறன் கொண்டவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இளைஞர்களால் மட்டுமே நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும் என்றும், இளைஞர்கள் மூலம் இந்தியா உலக சாம்பியனாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல வண்ண ராஜஸ்தானி கலாச்சார ஆடையை அணிந்து, 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தொடர்ந்து 10வது முறையாக கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய அவர், இந்தியாவின் மிகப்பெரிய பலம் நம்பிக்கையே என்றார். அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இது துணையாக உள்ளது என்றார்.
நாட்டில் தொடர் குண்டுவெடிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது. இன்று நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன. நக்சல் பாதித்த பகுதிகளிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
உலக வல்லுநர்கள் இந்தியா
2014 இல், நாட்டை வழிநடத்த நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை என்று மக்கள் முடிவு செய்தனர். ஸ்திரமற்ற காலத்திலிருந்து இந்தியா சுதந்திரமாக வளர்ச்சிப் பாதைக்கு நகர்ந்துள்ளது என்றார்.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன் எனக் கூறினார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு பிரதமர் பதவி அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இது அவரது 10-வது சுதந்திர தின உரையாகும். அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே செங்கோட்டையில் கொடியேற்ற முடியும்.
அந்த வகையில்தான் மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் என்பதை இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது ”மாற்றத்திற்கான உறுதி, என்னுடைய செயல்பாடு மீண்டும் ஒருமுறை என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. வரவிருக்கும் ஐந்தாண்டுகள் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் 2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் பொன்னான தருணமாக இருக்கும். அடுத்த வருடம், ஆகஸ்ட் 15-ந்தேதி இதே செங்கோட்டையில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி சாதனைகளை பட்டியலிடுவேன்” என்றார். இந்திய மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதேவேளையில் 50 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.