வளர்ப்பு நாயின் பிறந்த நாளுக்குரூ.2.5 லட்சம் தங்க சங்கிலியை பரிசளித்த பெண்

மும்பை, ஜூலை 8-
தன்னிடம் அன்பு காட்டும் செல்லப் பிராணியான நாய்க்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நாயின் பிறந்த நாளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை வாங்கி பரிசாக அளித்துள்ளார்.
நாயின் கழுத்தில் அவர் தங்கச் சங்கிலியை அணிவித்து மகிழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சரிதா சல்தான்ஹா என்ற அந்தப் பெண் தனது செல்லப்பிராணி நாயான டைகரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார்.
அப்போது, செம்பூரில் உள்ள அனில் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் திடீரென புகுந்த சரிதா ரூ.2.5 லட்சத்துக்கு தங்க சங்கிலியை வாங்கி தனது நாயின் கழுத்தில் தொங்கவிட்டுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழந்தனர்.
இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு அனில் ஜூவல்லர்ஸ் கூறுகையில், ‘‘எங்களது வாடிக்கையாளர் சரிதா சல்தான்ஹா தனது செல்லக்குட்டி டைகரின் பிறந்த நாளுக்காக டிசைன் டிசைனாக தேடிப்பார்த்து பரிசை தேர்வு செய்தார்.அற்புதமாக பளபளக்கும் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை தேர்வு செய்த அவர் டைகரின் கழுத்தில் மாட்டி அழகுபார்த்தார்.இதற்கு, உற்சாகத்துடன் தனது வாலை அசைத்து தனது எஜமானருக்கு நன்றி தெரிவித்தது டைகர். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் அழகான தோழமையை கொண்டாடிய தருணம் இது’’ என்று தெரிவித்துள்ளனர்.