வாக்களிக்க எருமை மீது வந்த பிஹார் இளைஞர்

பிஹார், மே 14- மக்களவை தேர்தலில் பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள உஜியார்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் இருக்கும் ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அலோக் மேத்தா களம் காண்கிறார்.இந்நிலையில், நேற்று உஜியார்பூர் தொகுதிக்குக் கருப்பு சட்டை, சாம்பல் நிற பேண்ட், பச்சை நிற துண்டை தலைப்பாகை போல் அணிந்தபடி எருமை மாட்டின் மீது ஏறி வாக்குச்சாவடிக்குச் சவாரி வந்தார் இளைஞர் ஒருவர். இந்த வினோதமான காட்சியை உள்ளூர் மக்கள், சிறுவர்கள் உட்பட பலர் வேடிக்கை பார்த்தனர். சிலர் அவரை புகைப்படம் எடுத்தனர்.அந்த நபர் வாக்களித்ததை அடுத்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதன்முறையாக வாக்களிக்க வந்திருக்கிறேன். மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெறக்கூடியவர் எங்கள் கிராமத்திலிருந்து வறுமையை ஒழித்து, இளைஞர்களுக்கு வேலை அளித்து, விலைவாசி ஏற்றத்துக்குத் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கிறேன்” என்றார்.