வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்

புதுடெல்லி:ஏப்.25-
பதினெட்டாவது மக்களவைக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக முடிந்துவிட்டது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிலவரத்தை அறிவிப்பதில் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால், வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது, சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துபோனது போன்றவை போதிய கவனம் பெறவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் நீடிக்கும் இந்த விவகாரங்களுக்குத் தீர்வுகாண, தேர்தல் ஆணையத்திடம் என்ன திட்டங்கள் இருக்கின்றன என்கிற கேள்வி எழுகிறது.
பெயர் எப்படி விடுபடுகிறது? – ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.88 கோடிப் பேர் (மொத்த வாக்காளர்களில் 30% பேர்) வாக்களிக்கவில்லை. தேவையான ஆவணங்களோடு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, பட்டியலில் பெயர் இல்லாமல் ஏமாற்றத்தோடு திரும்பியவர்களும் ஏராளம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்குரிமையைச் செலுத்தாதது வாக்காளரின் தனிப்பட்ட விவகாரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் என்கிற நம்பிக்கையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பும் வாக்காளர்களின் குமுறல்களுக்கு யார் பதிலளிப்பது?
ஒரே வீட்டில் பல ஆண்டுகளாக வசித்துவருபவர், பல தேர்தல்களாக வாக்களித்துவரும் சூழலில், அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து எப்படி விடுபட்டுப்போகும்? தேர்தல் பணியாளர்கள் எந்த அடிப்படையில் பெயரை நீக்குகிறார்கள்? பெயர் நீக்கத்தைத் தேர்தல் பதிவு அதிகாரி (ERO) எப்படி அங்கீகரிக்கிறார்? இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுகின்றன.