வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

சென்னை:அக்டோபர் . 26 – வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலும் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், நேற்று தலைமைச்செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்தினார்.
நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் 1.15 மணி வரை நீடித்தது. கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள், வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றும்படி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு சத்யபிரத சாஹூ அறிவுறுத்தினார்.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: தேர்தல் பணிக்காக பணியாளர்கள் அதிகளவில் செல்கின்றனர். அவர்களுக்கு போதிய சுகாதார வசதி செய்து தரவேண்டும். இயற்கை உபாதையை கழிக்க அவர்கள் சென்றால், உடனடியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, தேர்தல் ஆணையத்தின் செலவில் இ-டாய்லெட் அமைக்க வேண்டும்.முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அதிமுக): பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் விருப்பு வெறுப்பின்றி அனைத்து கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களை முழுமையாக பட்டியலில் சேர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் இருந்து தகவல் பெற்று இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்படும்போது அங்கு குடியிருந்தவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டால் அவர்கள் வாக்களிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.