வாக்குச்சாவடி வன்முறை

இம்பால்: ஏப். 20: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இதனால், பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது.
இந்த கலவரத்தில் 210-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர்
மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் நிறுத்தம்: வன்முறை சம்பவங்கள் நடந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, வெளி மணிப்பூர் தொகுதியில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் தேர்தலை புறக்கணிக்குமாறு பல்வேறு குகி அமைப்புகள் அழைப்பு விடுத்ததால் அங்கு வாக்குப்பதிவு விகிதம் குறைவாக இருந்தது.
மணிப்பூரில் காலை 11 மணிநிலவரப்படி 27.64 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாலும், காங்போக்பியில் இது 12 சதவீதமாக இருந்தது.
நாகா மக்கள், நேபாளிகள் போன்ற பிற சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
வெளி மணிப்பூரின் எஞ்சிய 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.