வாக்குப்பதிவில் வன்முறை

போபால், நவ.17-
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் பிஜேபி தொண்டர்கள் மோதிக்கொண்டனர் கல் வீச்சு சம்பவங்களும் நடந்தது. பதட்டமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடந்தது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது
மத்தியப் பிரதேசத்தின் திமானி தொகுதியில் இரு பிரிவினர் கற்களை வீசித் தாக்கியதையடுத்து வன்முறை வெடித்தது. ஒருவர் காயமடைந்துள்ளார். பாதுகாப்புப் படையினர் தடியடிகளை ஏந்திச் செல்வதைக் காணமுடிந்தது. மிர்கான் கிராமத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்
இதுகுறித்து டிஎஸ்பி விஜய் சிங் படோரியா கூறுகையில், தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கிராம மக்கள் சிலர் புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்றார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது, மேலும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க தேர்தல் ஆணையம் விரிவான போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இரண்டு மாநிலங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மத்திய பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது. இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க,முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 7-ம் தேதி, நக்சல் பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இதர 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் பிலாஸ்பூர் மண்டலத்தில் 25 தொகுதிகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 3-ல்ஒரு பங்கு எம்எல்ஏக்கள் தேர்வுசெய்யப்படுவதால், பிலாஸ்பூர்மண்டலம் பாஜக, காங்கிரஸுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த முறை, இப்பகுதியின் முடிவுகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது