வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி? – கார்கே கேள்வி

புதுடெல்லி, மே 8: இரு கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக இண்டியா கூட்டணியின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 52 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களை பார்த்து வருகிறேன்.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட, இரண்டாம் கட்டவாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பொதுவாக தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?இதுகுறித்து தேர்தல் ஆணையம் எவ்வித விளக்கமும் அளிக்காதது ஏன்? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் முதல்கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்தஏப்ரல் 20-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் முதல்கட்ட தேர்தலில் 65.5 %வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட தேர்தலில் 60.96% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் கடந்தஏப்ரல் 27-ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தில், 66.7% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், முதல்கட்ட தேர்தலில் 66.14%, இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டதேர்தலில் 5.5 சதவீதம் அளவுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 5.74 சதவீதம் அளவுக்கும் வாக்குப் பதிவு சதவீதம் திடீரென உயர்ந்திருக்கிறது.
மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் எவ்வளவு வாக்குப் பதிவு சதவீதம் பதிவானது என்பது குறித்த முக்கியமான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
இந்த விவரங்களை அளித்தால் மட்டுமே கூடுதலாக பதிவான வாக்குகள் எந்த தொகுதிகளை சேர்ந்தவை? குறிப்பிட்ட ஒரு தொகுதியில் மட்டும் வாக்குகள் கூடியிருக்கிறதா? கடந்த 2019-ல் பாஜக குறைவான வாக்குகள் பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த கட்ட தேர்தல்களில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பதுஉள்ளிட்ட முக்கிய விவரங்களையும் தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்தால், தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் செய்ய முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.