வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஜெய்ப்பூர்,நவ.25-
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9.30 மணி நிலவரப்படி 9.77% வாக்குகள் பதிவானது. பகல் 12 மணி நிலவரப்படி 25 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பிஜேபி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது இரு கட்சிகளுக்கும் சம பலம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5.25 கோடி பேர் தகுதி பெற்ற வாக்காளர்கள். இதில் 2.73 கோடி பேர் ஆண்கள், 2.52 கோடி பேர் பெண்கள். மொத்தம் 1,862 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 61,021 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்தபடி வாக்களித்து விட்டனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல்ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது.
700 கம்பெனி துணை ராணுவப் படையினர், 120 கம்பெனி அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர் 18 ஆயிரம் பேர், பிற மாநில ஊர்க்காவல் படையினர் 15 ஆயிரம் பேர், 70 ஆயிரம் போலீஸார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் 65,277 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 67,580விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ராஜஸ்தானில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.வாக்குப்பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கஜேந்திர சிங் ஷெகாவத், வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு ராஜஸ்தான் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், வாக்களிக்கும் அதிகாரத்தை மக்கள் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவர்கள் வாக்களிப்பார்கள் என எண்ணுகிறேன். போதுமான பெரும்பான்மையுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரசும், பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைக்கும் முறைக்கு இம்முறை முடிவுரை எழுதப்படும். மக்களின் உணர்வு காங்கிரசோடு இருக்கிறது என கூறினார்.வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தானில் வலிமையான அரசை பாஜக அமைக்கும். பெண்கள் அதிக அளவில் இம்முறை வாக்களிப்பார்கள். ஜனநாயகத்தின் வலிமையை நாம் பார்ப்போம் என குறிப்பிட்டார்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க முன்வர வேண்டும். மிகப் பெரிய சதவீதத்தில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானில் இன்று பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.