வாக்குவாதம் முற்றியதில் நண்பர்களுக்கு கத்தி குத்து; ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி, செப். 12- டெல்லியின் மல்காகஞ்ச் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பிரின்ஸ் (வயது 20) மற்றும் மிகிர் (வயது 21). இவர்களது நண்பர் சித்தார்த். மூன்று பேரும் ஓரிடத்தில் கூடி இளம்பெண் ஒருவரை பற்றி பேசி கொண்டு இருந்துள்ளனர். இதில், வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த சித்தார்த், தனது நண்பர்களான பிரின்ஸ் மற்றும் மிகிர் ஆகிய இருவரையும் கத்தியால் பல முறை குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சித்தார்த் தப்பியுள்ளார். சகோதரர்களின் உறவினரான நித்தேஷ் என்பவர் அவர்களை கவனித்து, மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதில், பிரின்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து கொண்டு வந்துள்ளனர். இளம்பெண் பற்றிய வாக்குவாதம் முற்றியதில் நண்பர்களுக்குள் பகை ஏற்பட்டு மோதல் நடந்து உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.