வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பிஜேபி

டெல்லி: ஜூன் 4
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே பாஜக ஒரு தொகுதியில் வென்றுவிட்டது. அது எந்த தொகுதி.. தேர்தலுக்கு முன்பே பாஜக அதைக் கைப்பற்றியது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
நாடு முழுக்க 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 272 இடங்களை வெல்லும் கட்சி அல்லது கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். நாட்டில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. லோக்சபா தேர்தல்: நாட்டில் 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 542 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் வாக்குப்பதிவுக்கு முன்பே கூட பாஜக ஒரு இடத்தை கைப்பற்றியிருந்தது. வாக்குப்பதிவுக்கு முன்பே பாஜக எப்படிக் கைப்பற்றியது. அங்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். சூரத்: பாஜக வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி பெற்ற தொகுதி தான் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத். குஜராத்தில் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 25 தொகுதிகளுக்கு அப்போது தேர்தல் நடந்தது. ஏனென்றால் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக அதற்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்றது. ஏனென்றால் அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் உள்ள குழப்பம் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது வேட்புமனுவில் முன்மொழிந்தவர்கள் கடைசி நிமிடத்தில் அது தங்கள் கையெழுத்தே இல்லை எனச் சொல்லிவிட்டனர்.