வாக்கு விகித அறிவிப்பில் தெளிவின்மை- குழப்பத்தில் வாக்காளர்கள்

சென்னை: ஏப். 20:
தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 69.46% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெளிவற்ற வாக்கு விகித வேறுபாடு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றி மக்களவை தேர்தல் வெள்ளிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி, 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், தருமபுரியில் 75.44 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 67.82 சதவீத வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு, டெல்லியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த பட்டியல் வெளியானது. அதில், தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 69.46% என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 7 மணி நிலவரப்படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 70.93% வாக்குகள் பதிவாகியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால், நள்ளிரவில் வெளியிடப்பட்ட பட்டியலில், அந்த தொகுதியில் 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் 7 மணி நிலவரத்துக்கும் 12 மணி நிலவரத்துக்கும் இடையே வித்தியாசம் காணப்படுகிறது.பொதுவாக வாக்குப்பதிவு முடிந்து அறிவிக்கப்படும் வாக்கு சதவீத அளவுக்கும், இறுதியில் அறிவிக்கப்படும் வாக்கு சதவீத அளவுக்கும் இடையே சற்று ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால், மத்திய சென்னையில் இரவு 7 மணிக்கு 67.35% வாக்குகள் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி நிலவரப்படி அந்த சதவீதம் 53.91% என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்கள் இடையே குழப்பத்தையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்துமே வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மட்டுமே. தபால் வாக்குகள் எண்ணிக்கை இதில் சேராது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு – நள்ளிரவு 12 மணி நிலவரம்:
திருவள்ளூர் – 68.31%
வட சென்னை – 60.13%
தென் சென்னை – 54.27%
மத்திய சென்னை – 53.91%
ஸ்ரீபெரும்புதூர் – 60.21%
காஞ்சிபுரம் – 71.55%
அரக்கோணம் – 74.08%
வேலூர் – 73.42%
கிருஷ்ணகிரி – 71.31%
தருமபுரி – 81.48%
திருவண்ணாமலை – 73.88%
ஆரணி – 75.65%
விழுப்புரம்- 76.47%
கள்ளக்குறிச்சி – 79.25%
சேலம்- 78.13%
நாமக்கல் – 78.16%
ஈரோடு – 70.54%
திருப்பூர் – 70.58%
நீலகிரி – 70.93%
கோவை – 64.81%
பொள்ளாச்சி -70.70%
திண்டுக்கல் – 70.99%
கரூர்- 78.61%
திருச்சி -67.45%
பெரம்பலூர் – 77.37%
கடலூர் – 72.28%
சிதம்பரம் – 75.32%
மயிலாடுதுறை – 70.06%
நாகப்பட்டினம் – 71.55%
தஞ்சாவூர்- 69.18%
சிவகங்கை – 63.94%
மதுரை – 61.92%
தேனி – 69.87%
விருதுநகர் -70.17%
ராமநாதபுரம் -68.18%
தூத்துக்குடி – 59.96%
தென்காசி – 67.55%
திருநெல்வேலி – 64.10%
கன்னியாகுமரி – 65.46%
இந்நிலையில், இன்று (ஏப்.20), காலை 11 மணிக்கு தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று பிற்பகல் 3 மணிக்கு இதுதொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.