வாட்ஸ்அப், பேஸ்புக் பிரச்சாரம்

புதுடெல்லி: மார்ச்.18-பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போதையை டிஜிட்டல் காலகட்டத்தில் கட்சிகள், தங்கள் பிரச்சாரத்துக்கு சமூக ஊடகங்களையே பெரிதும் நம்பியுள்ளன.
பாஜகவும் காங்கிரஸும் வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக மக்களை சென்றடைவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் 50 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ‘பிரதமரிடமிருந்து கடிதம்’ என்ற செய்தியை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஒவ்வொருக்கும் பாஜக அனுப்பி வருகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, அடுத்த செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கிறது.
அதேபோல், ‘My First Vote For Modi’ என்ற பெயரில் இணைய தளத்தையும் பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாக்காளர்கள் மோடிக்கு வாக்களிக்க உறுதி ஏற்பதுடன், ஏன் அவர்கள் மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தையும் பகிரும் வகையில் இந்த இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் வாட்ஸ்அப் வழியாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைச் சென்றடையும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வாட்ஸ்அப் தவிர்த்து, மக்களை உடனடியாக சென்றடைவதற்கான வழியாக ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களை கட்சிகள் பயன்படுத்துகின்றன. அதேபோல் யூடியூப் இன்ப்ளூயன்சர்களைப் பயன்படுத்தியும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
2019-ம் ஆண்டு அரசியல் விளம்பரங்களுக்காக பாஜக ரூ.325 கோடியும், காங்கிரஸ் ரூ.356 கோடியும் செலவிட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது