வானில் குலுங்கிய விமானம் 40 பயணிகள் காயம்

பிரேசிலியா: ஜூலை 2:
ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.
திங்கட்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ஏர் யூரோப்பா மற்றும் உள்ளவர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. விமானம் வானில் குலுங்கிய போது அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது என்பதை ஏர் யூரோப்பா தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 787-9 ட்ரீம்லைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று விமானம் மூலம் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏர் யூரோப்பா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பயணிகள் சிலர் பகிர்ந்துள்ளனர். அதில் பயணி ஒருவர் தலைக்கு மேல் இருக்கும் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கி இருந்தார்.