வாராணசியில் முஸ்லிம்கள் கடையடைப்பு

டெல்லி, பிப்.3: வாராணசியின் வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அனுமதி அளித்ததைஎதிர்த்து முஸ்லிம்கள் நேற்று பந்த் நடத்தினர். இதுதொடர்பான வழக்கு உத்தர பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இது, கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. மசூதி வளாகத்தின் ஒசுகானா அருகில் தென்கிழக்கு பகுதியின் அடிப்பகுதியில் (பாதாளத்தில்) வியாஸ் மண்டபம் அமைந்துள்ளது. இந்த சிறிய மண்டபத்துக்கு விஸ்வநாதர் கோயில் வாயில் எண்-4 வழியாக சென்று வரும் வழி உள்ளது.
கடந்த 1993 முதல் இங்கு நிறுத்தப்பட்டிருந்த அன்றாடப் பூஜைகளை தொடர தற்போது வாராணசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஜனவரி 31-ல் தொடங்கியபூஜைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாராணசியின் முஸ்லிம்கள் நேற்று கடையடைப்பு செய்துஅமைதியாக பந்த் நடத்தினர்.இதையொட்டி பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது. வாராணசியில் முஸ்லிம்களின் முக்கியப் பகுதிகளான தால்மண்டி, சராய் ஹட்டா, பீலி கோத்தி, மதன்புரா உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.